சென்னை,
சில நேரங்களில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து அனுமதி பெற்று, கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. நடனத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுதவிர, மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஸ்ரீலீலா, தற்போது கடை திறப்பு விழாக்களிலும் அதிகளவில் பங்கேற்று வருகிறார். சில நேரங்களில் படப்பிடிப்புத் தளத்திலிருந்து அனுமதி பெற்று, கடை திறப்பு விழாக்களில் கலந்துகொள்வதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு கணிசமான தொகை சன்மானமாகக் கிடைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நடிகை ஹனிரோஸ், கடை திறப்பு விழாக்களில் பங்கேற்பதன் மூலம் கவனம் பெற்றவர். சிறிய கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பல்வேறு திறப்பு விழாக்களில் கலந்துகொண்டு ரசிகர்களைச் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஸ்ரீலீலாவும் கடை திறப்பு விழாக்களில் அதிகளவில் பங்கேற்று வருவது திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், ரசிகர்களை நேரில் சந்தித்துப் பேசுவதிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி, இத்தகைய நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி வருவது ஸ்ரீலீலாவின் சமீபத்திய செயல்பாடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.