சென்னை,
இயக்குநர் கே. பாக்யராஜின் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பிறகு, அவர் தானமாக வழங்கிய கண்கள் இருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டு, அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. மறைந்த பிறகும் தனது கண்கள் மூலம் இருவரின் வாழ்வில் ஒளியேற்றிய பாக்யராஜின் மனிதநேயச் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான ஆர். பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"வணக்கம் கண்பர்களே.. நான் நண்பர்களே என்று சொல்வதற்கு பதிலாக 'கண்பர்களே' என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. நாம் மறைந்த பிறகும் நம்முடைய கண் மற்றவர்களுக்குக் கண்ணாக, பார்வையாக இருப்பது எவ்வளவு பெரிய வரம். அப்படிப்பட்ட நண்பர்களைத்தான் நான் கண்பர்களே என்று அழைக்கிறேன்.
இயக்குநர் பாக்யராஜ் சாரின் மரணம் எவ்வளவு பெரிய அதிர்ச்சியோ, அதற்குப் பின்னால் ஒரு சின்ன ஆனந்தம். அவருடைய கண் தானத்தின் மூலமாக இரண்டு பேருக்குப் பார்வை கிடைத்திருக்கிறது. உடல் தானமே நிரந்தரமற்ற இந்த வாழ்க்கையை நீட்டிப்பதற்கான சிறந்த யுக்தி. சக மனிதர்களுக்காக வாழும் இத்தகைய செயல் புத்திசாலித்தனம்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்த பதிவு, கண்தானம் மற்றும் உடல் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், இயக்குநர் பாக்யராஜின் இறப்புக்குப் பிறகும் அவரது கண்தானம் மூலம் இருவருக்கு பார்வை கிடைத்தது மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.