சினிமா செய்திகள்

பாக்யராஜ் மறைவு: எமலோகத்தில் யார் இவரை.. திரைக்கதை எழுத அழைத்தார்கள் - டி.ராஜேந்தர் இரங்கல்

பாக்யராஜ் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

டி.ராஜேந்தர், சமீபத்திய நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்ற நினைவுகளை பகிர்ந்து, எமலோகத்தில் யார் இவரை கதை எழுத அழைத்தார்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள்’ ஆகிய படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை கதாநாயகனாக அறிமுகம் செய்தார். பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமானார்.

திரைப்படத் துறையோடு எழுத்துலகிலும் முத்திரையைப் பதித்த பாக்யராஜ் பாக்யா என்ற இதழை தொடங்கி, அதன் ஆசிரியராக 20 ஆண்டுகளாக பணியாற்றினார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் சிறந்த வசனத்திற்காகவும், ‘தாய்க்குலமே தாய்க்குலமே’ படத்தின் சிறந்த திரைக்கதைக்காகவும் தமிழக அரசின் விருது பெற்ற இவர், ‘ஒரு கை ஓசை’ படத்தில் சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருதினைப் பெற்றார். ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். பாரதிராஜாவுடன் இணைந்து இவர் பணியாற்றிய ‘ஒரு கைதியின் டைரி’ படம் மிகச் சிறந்த வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தின் இந்தி பதிப்பில் அமிதாப் பச்சன் கதாநாயகனாக நடிக்க அப்படத்தை பாக்யராஜ் இயக்கினார்.

இந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாக்யராஜின் சமகால இயக்குநரான டி.ராஜேந்தர் உருக்கமான இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னோடு சமகாலத்தில் பணியாற்றியவர், தமிழ் திரை உலகத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்துத் தனிக் கொடி நாட்டியவர் என் இனிய நண்பர், எழுத்தாளர், இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்கள். அவர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற துக்க செய்தி என் காதுக்கு எட்டியதும் கவலை என் மனதை வாட்டியது.

அதற்குக் காரணம் என்னவென்றால், அண்மையில் தான் தமிழ் சினிமா உலகில் அவர் 50 ஆண்டுகாலம் பணியாற்றியதற்காக அவருக்குப் பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவிலே அவரைப் பாராட்டுவதற்கு எண்ணற்ற பேர் வந்திருந்தார்கள். அந்த விழாவிற்கு நான் வரவேண்டும் என பாக்யராஜ் ஆசையோடு அழைத்தார். சமீபகாலமாக நான் எந்த பொது விழாவுக்கும் செல்லாமல் தவிர்த்து விடுகிறேன். ஆனால், அன்று நான் என்ன நினைத்தேனோ தெரியவில்லை, அந்த விழாவில் நானும் கலந்து கொண்டு அவரை மனதாரப் பாராட்டினேன். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்திலேயே நம்மை விட்டு அவர் சென்று விடுவார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

எனக்கு ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால் அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை நான் மேடையில் மனதாரப் பாராட்டி விட்டேன் என்ற ஒரே ஒரு ஆறுதல் மட்டும் என் மனசுக்குள் இருக்கிறது. அந்த விழா மேடையிலேயே, டி.ராஜேந்தனும் நானும் இன்னும் இணைந்து பணியாற்றவில்லை எனப் பாக்யராஜ் சொல்லி இருந்தார். அவரது அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகத்தான், பாக்யராஜும் அவரது துணைவியார் பூர்ணிமாவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் தான் பாடலாசிரியராக பணியாற்றி இருக்கிறேன். படம் முடியும் தருவாயில் இருக்கும் நேரத்தில், அவர் இப்படி ஒரு முடிவுரையை எழுதி விடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. எமலோகத்தில், யார் இவரை கதை, திரைக்கதை, வசனம் எழுத அழைத்தார்கள் எனத் தெரியவில்லை” என்று டி.ஆர். ராஜேந்தர் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசியுள்ளார்.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

அவரது உடல் நுங்கம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரையுலகினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் பாக்யராஜ் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நாளை (28-06-2026) காலை 9:30 மணிக்கு இயக்குநர் பாக்கியராஜின் இறுதி ஊர்வலம் அவரின் இல்லத்திலிருந்து தொடங்கும் என இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பின்னர் அவரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் காலை 11 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது.