சென்னை,
இயக்குனர் பாரதிராஜாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது,
பிதாமகனே போய் விட்டாயா, கிராமத்து ராஜாவே இறந்து விட்டாயா, எங்கள் மண்வாசனையில் இன்று சாவு மணக்கிறதா.. அடைத்து கிடந்த திரையுலக கதவுகளை திறந்த வெளிக்கு திறந்து விட்டவரே ஆகாயத்துக்கு அடுத்து அதிக நட்சத்திரங்களை அறிமுகம் செய்தவரே.. என்னையும் சுயமரியாதையோடு சுடரொளி வீச செய்தவரே உடன்பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே என்ற தலைவர்களின் மொழிக்கு இணையாக என் இனிய தமிழ் மக்களே
என்ற ரத்தின சொற்களுக்கு முத்திரை செய்தவனே நீ மாயக்காரன். புழுதியை பொன் செய்தாய் சினிமாவின் நிறம் வெள்ளை என்று இருந்ததை கருப்பு என்று மாற்றிய கலையாளன் நீ. இடிந்த சுவர்களும் உடைந்த மனிதர்களும் கிழிந்த வாழ்க்கையும் உன் கதையின் கச்சா பொருள்கள் . இந்த கரட்டுப்பட்டியை தில்லி நகரத்துக்கு கொண்டு சேர்த்த அல்லிநகரத்து அரசன் நீ.
இனி நான் எப்படி தனியாக தேனி போவேன். மேற்கு தொடர்ச்சி மலை அருவிகளால் அழுது கொண்டே கேட்குமே எங்கே பாரதிராஜா. கத்தாழங்காட்டு கரிச்சான் கேட்குமே எங்கே பாரதிராஜா. கருவேலம் மரம் கேட்குமே எங்கே பாரதி ராஜா. என்ன பதில் சொல்வேன், எப்படி நான் தனித்திருப்பேன்.
நீ தூரிகை நான் வண்ணம், நான் தூரிகை நீ வண்ணம்.. தூரிகை இல்லாமல் வண்ணமும், வண்ணம் இல்லாமல் தூரிகையும் என்னத்துக்கு ஆகும். நீ அரிவாள், நான் கைப்பிடி.. நான் அரிவாள் நீ கைப்பிடி, கைப்பிடி இல்லாத அரிவாளும், அரிவாள் இல்லாத கைப்பிடியும் என்னத்துக்கு ஆகும்.
என்னை அழவிடு, என்னை அழவிடு உடம்பின் உப்பெல்லாம் கண்ணீராய் கரையட்டும். இனி என்ன எழுத நடிகர் திலகம் போல் நானும் புலம்புகிறேன். பூங்காத்து திரும்புமா ஏன்பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வச்சு தாலாட்ட எனக்கொரு தாய்மடி கிடைக்குமா. முதல் மரியாதை செய்தவனே உனகென் இறுதி மரியாதை
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.