ஐதராபாத்,
தெலுங்கு திரையுலகில் பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான அனசுயா பரத்வாஜிக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாச பதிவுகள் வெளியிட்டு தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஜனார்தன் என்ற நபர் அனசுயா குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்டு வந்தது தெரியவந்தது. அவர் அனசுயாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை மாற்றியமைத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், அவமதிப்பான கருத்துகளையும் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனசுயா பரத்வாஜ் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்து விசாரணை நடத்தியதில் ஜனார்தன் என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைதளங்களில் பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அதிகரிப்பதற்காகவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக ஜனார்தன் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது அவர்மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.