சினிமா செய்திகள்

“பிக்பாஸ்” பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப்பதிவு

‘பிக்பாஸ்’ முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் ஒருவர் குற்றம் சாட்டி ஆடியோக்களை வெளியிட்டிருந்தார்.

திருமணம் செய்து கொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றியதாக இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் இன்ஸ்டா பிரபலம் ஒருவர் நேரில் சென்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட அந்தப் புகார் மனுவின் அடிப்படையில், தற்போது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 69-ன் கீழ் முத்துக்குமரன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அந்த இளம்பெண் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பிக்பாஸ் பிரபலம் முத்துக்குமரன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகப் பதிவிட்டிருந்தார். அந்தச் சமூக வலைதளப் பதிவின் அடிப்படையில், முத்துக்குமரன் தரப்பிலிருந்தும் ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இளம்பெண் அளித்த புகாரின் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது.

முத்துக்குமரன் தரப்பு விளக்கம்

முன்னதாக, இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த முத்துக்குமரன், நாங்கள் நட்பாக மட்டுமே பழகினோம் என்றும், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களை அவர் வெளியிடுவதாகவும் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எதிர் புகார் அளித்திருந்தார்.

முத்துக்குமரன் அளித்த புகாரை ஆய்வு செய்த விருகம்பாக்கம் போலீசார், அதில் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுமாறும் அவருக்குக் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தனர்.

SCROLL FOR NEXT