சினிமா செய்திகள்

உறியடி விஜய் குமாரின் “அறிவு” படத்தில் நடிக்கும் பிக் பாஸ் சுபிக்‌ஷா

பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘அறிவு’ படம் உருவாகியுள்ளது.

‘உறியடி’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜய் குமார். தொடர்ந்து, ‘உறியடி 2’ மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படத்திற்கு இவர் வசனம் எழுதியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து ‘பைட் கிளப்’, ‘எலக்சன்’ திரைப்படங்கள் மூலம் ஆக்சன் நாயகன் ஆனார்

சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜய் குமார் நடித்து வருகிறார். மகளிர் நாளை முன்னிட்டு இப்படத்திற்கு, ‘அறிவு’ என பெயரிட்ட போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், ‘அறிவு’ திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற மீனவப் பெண் சுபிக்‌ஷா, நடிகர் விஜய் குமாரின் ‘அறிவு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டரில், பிக் பாஸ் புகழ் சுபிக்‌ஷா இடம்பெற்றுள்ளார். இதன்மூலம் இப்படத்தில் சுபிக்‌ஷாவும் முக்கிய பாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சுபிக்‌ஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இயக்குநர் சத்ய சிவாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனது நீண்டநாள் கனவான நடிப்புப் பயணம் அறிவு திரைப்படத்தின் மூலம் சுபிக்‌ஷாவுக்குத் தொடங்கியுள்ளது. இதற்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருப்பேன் என சுபிக்‌ஷா குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள், பிக் பாஸ் பிரபலங்கள் பலர் சுபிக்‌ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.