சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள் சிறப்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை விஜயின் ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,எங்கள் அன்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அண்ணா..வரவிருக்கும் ஆண்டு ஆரோக்கியமாகவும் வளமாகவும் அமையட்டும் அண்ணா என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . மக்கள் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் தொடர் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அன்பு அண்ணா விஜய், வழக்கமாக இந்நாளில் வெளியாகும் திரைப்பட அறிவிப்புகள், 'பர்ஸ்ட் லுக்' (first look) போஸ்டர்கள், முதல் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீடுகள் ஆகியவற்றை நாங்கள் மிகவும் இழக்கிறோம். இருப்பினும், உங்கள் தலைமையிலான ஆட்சியில் மிகக் குறுகிய காலத்தில் (ஒன்றரை மாதங்களுக்குள்) மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றத்தையும், பல்வேறு விவகாரங்களை நீங்கள் கையாளும் விதத்தில் வெளிப்படும் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தையும் காணும்போது, உங்களைப் போன்ற ஒரு முதலமைச்சரைப் பெற்றதற்கு நாங்கள் பெருமகிழ்ச்சியும் பாக்கியமும் கொள்கிறோம். இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வெற்றியைத் தரட்டும்; உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்! என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் அனைவரது நெஞ்சிலும் குடியிருக்கும் அன்புத் தளபதி நமது மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . நாங்கள் எப்போதும் உங்களை நேசிக்கிறோம் சார். என்று தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு சுந்தர் வெளியிட்டுள்ள பதிவில், எனது சகோதரரும், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் நல்ல உடல்நலத்துடன் திகழவும், இறைவன் உங்களுக்குப் பெருமளவில் அருள்புரியவும் வேண்டுகிறேன். மிகுந்த அன்புடன். என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், பல கோடி இதயங்களின் அன்பைப் பெற்றிருக்கும் அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். என்று தெரிவித்துள்ளார்.