சென்னை,
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கவியரசே! பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வைத் தழுவிநடக்கிறது உன்தமிழ். கீற்றுக் கொட்டகைக்கு கிரீடம் சூட்டியது உன்பாடல். பாமரர் நாவில் பழமொழியானது உன்பல்லவி மொழியின் சகல செளகரியங்களையும் பாட்டுக்குள் பரிமாறியவன் நீ.
மதுவோ மதமோ கீதையோ கோதையோ நீ எதை எழுதினாலும் உன் தமிழுக்கு மயங்கியது தமிழச்சாதி. எறும்புத்தோலை உரித்துப்பார்த்து யானை கண்டவன்; இதயத்தோலை உரித்துப்பார்த்து ஞானம் கண்டவன். கலவியைத் “துன்பம் போன்ற இன்பம்” என்றவன்.
தன்னைக் “கண்ணீர் வரைந்த ஓவியம்” என்றவன். பாவேந்தரைத் தொடர்ந்து திரையில் கவிதைசெய்த பெருங்கவிஞன். கடந்த நூற்றாண்டில் கால்நூற்றாண்டின் கையொப்பம் நீயல்லவா?. உன் கைத்தமிழைவிட கானத் தமிழுக்கு ஆயுள் அதிகம்.
கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா!. இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா உன் தமிழைப் பிரிக்க முடியாதய்யா. உன் நூற்றாண்டை இன்று தொடங்குகிறாய்; நாங்கள் நிறைவுசெய்வோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.