சினிமா செய்திகள்

‘டாக்ஸிக்’ பட இயக்குநர் கீது மோகன்​தாஸ் பிறந்தநாள்.. படக்குழுவினர் வெளியிட்ட பி.டி.எஸ் வீடியோ

இயக்குனர் கீது மோகன்​தாசுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கீது மோகன்தாஸ், நடிகை மற்றும் திரைக்கதை ஆசிரியராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் நடிகையாகவும், அதன்பின் சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநராகவும் உயர்ந்தார்.

இயக்குநராகப் புகழ்

கீது மோகன்தாஸ் இயக்கிய ‘லையர்ஸ் டைஸ்’ திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ‘மூத்தோன்’ திரைப்படமும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘டாக்ஸிக்’ திரைப்படம்

தற்போது, கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1940 முதல் 1970-ஆம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு, ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் ‘டாக்ஸிக்’ திரைப்படம் உருவாகியுள்ளது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படக்குழு வெளியிட்ட பி.டி.எஸ் வீடியோ

இந்த நிலையில், இயக்குநர் கீது மோகன்தாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி, ‘டாக்ஸிக்’ படக்குழு கீது மோகன்தாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பிரத்யேக BTS (Behind The Scenes) காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.