சினிமா செய்திகள்

“பைசன்” படம் எனக்கு தேசிய அங்கீகாரத்தை பெற்று தந்தது - துருவ் விக்ரம்

கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான ‘பைசன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

‘பைசன்’ படத்திற்காக தான் அனுபவித்த கடும் வெயில், உழைப்பு என அனைத்தும் இப்போது பலன் தந்துள்ளன. உலகத்தரம் வாய்ந்த மேடைகளில் பேச அழைக்கப்பட்டதை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று துருவ் விக்ரம் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், பின்னர் தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்தார்.

‘பைசன்’ வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தில் கவனம்

சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. குறிப்பாக, துருவ் விக்ரமின் நடிப்பு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.

‘டிவி4’ படத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் கூட்டணி

தற்போது துருவ் விக்ரம் தனது 4-வது திரைப்படமான ‘டிவி4’ -ல் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். துருவ் விக்ரமும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் முதல் முறையாக இணைவதால், இந்த படம் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமம்’ மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் ‘கொடி’ படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்திருந்தார், இந்த ஜோடியின் காதல் காட்சிகள் அந்த படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

‘பைசன்’ படத்தின் புரமோஷன் தொடர்பாக துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற நிலையில், அவர்களுக்குள் காதல் இருப்பதாக செய்திகள் பரவின.

தேசிய அங்கீகாரத்தை பெற்று தந்த “பைசன்” படம்

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகர் துருவ் விக்ரம் பேசியுள்ளார். அதில் “பைசன் படத்திற்காக நான் அனுபவித்த கடும் வெயில், உழைப்பு என அனைத்தும் இப்போது பலன் தந்துள்ளன. உலகத்தரம் வாய்ந்த மேடைகளில் பேச அழைக்கப்பட்டதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. கபடி வீரர்களுடன் பழகியது என்னை கதாபாத்திரத்திற்குள் நுழைய உதவியது. எனது தந்தை விக்ரம் பல ஆண்டுகள் போராடித்தான் இந்த இடத்திற்கு வந்தார். அவரது உழைப்பு எனக்கு மிகப்பெரிய பாடம். அவரது வாரிசாக இருப்பதில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ‘மகான்’ படத்தில் அவரை அடிக்கும் காட்சியில் நடித்த பிறகு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்” என்று பேசியுள்ளார்.