மும்பை,
பட்டாசு வெடிக்க வேண்டாம் என்ற நடிகை தியா மிர்சாவின் விழிப்புணர்வு வீடியோவுக்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்து பண்டிகைகள் குறிவைக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.
மும்பையில் காற்றுமாசு அதிகரித்து வருவதை தொடர்ந்து, பட்டாசுகளை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியில் தீபாவளியை கொண்டாடுமாறு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில், மும்பை மாநகராட்சி சார்பில் 'மாசு இல்லாத தீபாவளி' என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரசாரத்துக்காக நடிகைகள் தியா மிர்சா, மாதுரி தீட்சித், நிஷிகந்தா வாட் மற்றும் கிரிக்கெட் வீரர் அஜிங்கே ரஹானே உள்பட பல பிரபலங்கள் நடித்த விழிப்புணர்வு வீடியோக்கள் மாநகராட்சியின் சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிடப்பட்டன.
இதில் தியா மிர்சா தனது வீடியோவில் தீபாவளியை பொதுமக்கள் ஆரோக்கியமாக, பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என கூறியிருந்தார். மேலும் அவர் மும்பையில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
நடிகை தியா மிர்சாவின் இந்த கருத்துக்கு மும்பை பா.ஜனதா தலைவர் அமித் சதம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தீபாவளியை எப்படி கொண்டாட வேண்டும் என்று தியா மிர்சாவிடம் இருந்து நாங்கள் பாடம் கற்கவேண்டிய அவசியம் இல்லை. எங்களின் பாரம்பரியங்கள் கலாசாரத்துடன் ஆழமாக வேரூன்றியவை” என்று பதிவிட்டு மும்பை மாநகராட்சியை விமர்சித்து இருந்தார்.
பா.ஜனதா தலைவரின் எதிர்ப்பை அடுத்து, மாநகராட்சியின் எக்ஸ் பக்கத்தில் இருந்து தியா மிர்சாவின் வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டது. எனினும் மாதுரி தீட்சித், அஜிங்கே ரஹானே ஆகியோரின் வீடியோக்கள் நீக்கப்படவில்லை. இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து மேயர் ரிது தாவ்டே கூறுகையில், "தியா மிர்சா எப்போதும் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்தவர். அவர் எப்போதும் இந்துக்களுக்கு எதிரானவர் என்பதால் அவரது வீடியோவை நாங்கள் தடை செய்துள்ளோம்” என்றார்.
மத்திய மந்திரியும், இந்திய குடியரசு கட்சித்தலைவருமான ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறுகையில், "தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசுகள் இல்லையென்றால், அந்த பண்டிகையின் முக்கியத்துவமே குறைந்துவிடும். அதேவேளையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். தியா மிர்சா இத்தகைய கருத்துகளை தெரிவித்து, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியது முறையற்றது" என்றார்.
பா.ஜனதாவை சேர்ந்த மாநில மந்திரி நிதேஷ் ரானே பேசுகையில், "தீபாவளிக்கு அறிவுரை கூறும் தியா மிர்சா, ரம்ஜான் அல்லது பக்ரீத் பண்டிகைகளின் போது இதுபோன்ற கருத்துக்களை கூறுவதில்லை. சனாதன இந்து மதத்திற்கு எதிரான இத்தகைய செயல்கள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் ஆலோசித்து, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் என்ற பெயரில் இந்து பண்டிகைகள் திட்டமிட்டு குறிவைக்கப்படுகின்றன” என்றார்.