மும்பை,
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான், சமீபத்தில் தனது 61-வது வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி கவுரி ஸ்ப்ராட் (47) ஆவார். அமீர்கானின் மூன்றாவது திருமணம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கவுரி ஸ்ப்ராட் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல. இதற்கு முன்பு அமீர்கானின் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களும் நடைபெற்றன. அமீர்கான் - கவுரி ஸ்ப்ராட் தம்பதிக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சமூக வலைதளம் மூலமாக அமீர்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமீர்கானும், அவருடன் இருப்பவர்களும் லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதாக கூறி பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஆர்சூ பிஷ்னோய், டைசன் பிஷ்னோய் ஆகியோரின் முகநூல் பக்கத்தில் இருந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த பதிவில், அமீர் கான் மற்றும் பிறர் "லவ் ஜிகாத்" நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக குற்றம்சாட்டியள்ளது. மேலும், இது "சனாதன தர்மத்துக்கும் நாட்டுக்கும் எதிரான செயல். இதுபோன்ற செயல்களை தாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும், இதற்கு "மிக விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் . பிரபலம் என்ற பெயரில் இந்த விஷயத்தை ஊக்குவிப்பவர்களின் மூச்சை நாங்கள் அடக்குவோம்." என அந்தப் பதிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து அமிர் கான் தரப்பில் இன்னும் போலீஸில் புகார் செய்யவில்லை. அச்சுறுத்தல் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக மும்பை குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல் துறையைச் சேர்ந்த குழுவினர் பாந்த்ரா, பாலி ஹில்லில் உள்ள அமீர் கானின் இல்லத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.