சினிமா செய்திகள்

அதிகாரத்திற்கு அடிபணியும் பாலிவுட் - இயக்குநர் அனுராக் காஷ்யப் குற்றச்சாட்டு

அனுராக் கஷ்யப் சமீபத்தில் “என் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் சூழல் இருக்கும் தென் இந்திய சினிமாவிற்கு போகப்போகிறேன்” என தெரிவித்திருந்தார்.

பாலிவுட் திரையுலகம் அதிகாரத்துக்கு வளைந்து கொடுப்பதாக பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். அனுராக் காஷ்யப் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘லியோ’ படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘மகாராஜா’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரைபில் கிளப்' படத்திலும் நடித்துள்ளார். வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ படத்திலும் நடித்துள்ளார்.

தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் அனுராக் கஷ்யப். இவரது பல படங்கள் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாகவே தடை செய்யப்பட்டுள்ளன. இரண்டு பாகங்களாக இவர் இயக்கிய கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உலகம் முழுவதிலும் உள்ள சினிமா ரசிகர்களை கவர்ந்த திரைப்படம். பாலிவுட் சினிமாவையும் பாலிவுட் நடிகர்களின் மீதும் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அனுராக் கஷ்யப். தரமான படங்களை இயக்கியும் தனது படங்களை வெளியிட பல சவால்களை சந்தித்து வந்த அனுராக் காஷ்யப் தென் இந்திய சினிமா பக்கம் கவனம் செலுத்த தொடங்கினார்.

தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர் அனுராக் காஷ்யப். பாலிவுட் சினிமா குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில், இந்தி திரையுலகம் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கிறது என்றும், தென்னிந்திய திரையுலகம் அப்படியொரு தவறை செய்வதில்லை என்றும் விமர்சித்துள்ளார் அனுராக்.

இது தொடர்பாக அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “பாலிவுட் திரையுலகில் இருப்பவர்கள் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்க ஆசைப்படுவதில்லை. ஆனால், ஒருமுறை அவர்கள் அந்த முடிவை எடுத்துவிட்டால், அதன் பிறகு அவர்களால் அதிலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் ஒருமுறை பணிந்துவிட்டால், என்னென்றும் அவர்கள் பணிந்தே கிடக்கிறார்கள். பல விஷயங்களுக்கு நீங்கள் ஒருமுறை சம்மதம் தெரிவித்துவிட்டால், அதன் பிறகு உங்களால் முடியாது என மறுப்பு கூட முடியாது. ஏனென்றால், அந்த ஒருமுறை நீங்கள் சம்மதம் சொல்வதன் மூலம் ஏராளமான பலன்கள் உங்களுக்கு கிடைத்துவிடும். அந்த பலனை அனுபவித்த உங்களால் மறுமுறை முடியாது என சொல்லவே முடியாது.

இது குறித்து அவர்கள் விழிப்படைந்து இருந்தாலும், சில சமயங்கள் தர்மசங்கடமாகவும், அவமானமாகவும் கருதினாலும், அவர்களால் எதுவுமே செய்ய முடிவதில்லை. மற்ற திரைத்துறையை பொறுத்தவரை, பிராந்திய ரீதியாக அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். ஆழமான கலாச்சார தொடர்பை கொண்டிருப்பதால் அவர்களை பிரிக்கவே முடியாது.” என்றார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பாலிவுட் சினிமாவை விட்டு வெளியேற இருப்பதாக அனுராக் கஷ்யப் அதிர்ச்சியளித்தார். “என் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் சூழல் இருக்கும் தென் இந்திய சினிமாவிற்கு போகப்போகிறேன்” என அவர் தெரிவித்திருந்தார்.