சினிமா செய்திகள்

“பல தடைகளை உடைத்து அற்புதமான ஆட்சியை கொடுங்கள்” - விஜய்க்கு சமுத்திரக்கனி வாழ்த்து

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் சமுத்திரக்கனி தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருப்பதி,

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டு வருகிறது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை அடுத்து தவெகவுக்கு தற்போது வரை 117 இடங்கள் உள்ள நிலையில், ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலை உள்ளது. 2 இடங்களை வைத்துள்ள விசிக, தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இரண்டு தொகுதிகளில் வென்ற விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் சமுத்திரக்கனி தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமுத்திரக்கனி பேசியதாவது, "பல தடைகளை தாண்டி தற்போது, ஆட்சி அமைக்க இருக்கும் என் அன்பு சகோதரர் தளபதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இந்த தடைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை சகோதரா. இதைத் தாண்டி பல தடைகளும், பல சிக்கல்களும் உங்களை தேடி வரும். இது எல்லாவற்றையும் உடைத்து எரிந்து ஒரு அற்புதமான ஆட்சியை கொடுத்து இந்த தமிழகத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். வெல்வோம்" என்று பேசியுள்ளார்.