தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், அஜித்குமார் ரேஸிங் என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. இந்த அணி ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு பந்தயங்களில் பங்கேற்க இந்த அணி திட்டமிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கார் ரேசிங்கில் ஈடுபட்டுள்ள போதிலும், கிடைக்கும் நேரத்தில் ரசிகர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கார் ரேசிங்கை மட்டுமின்றி நடிகர் அஜித் குமாரை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர்.
இந்த நிலையில், செய்தியாளருக்கு சமீபத்தில் பேட்டியளித்த அஜித் குமார் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் ஆதரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அஜித் குமார், “இது எனக்கு மிகவும் முக்கியமானது. அதாவது, பெரும்பாலான நேரங்களில் ஒருவர் தனது சவுகரியத்தை விட்டு வெளியே வரும்போது, அவர் அப்படிச் செய்யலாமா, கூடாதா என்பது போன்ற பல விமர்சனங்களும் விவாதங்களும் எழுகின்றன. ஆம், நானும் அதை எதிர்கொள்கிறேன்.மலேசியா, துபாய் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவுக்கு நன்றி. சர்கியூட் ஆப் ஸ்பா-வில் என்னை ஆதரிக்க சுமார் 9000 ரசிகர்களும், நர்பர்கிங்கில் 6000 ரசிகர்களும் வந்திருந்தனர். நான் சரியான பாதையில் செல்கிறேன் என்பதை இது எனக்கு உறுதிப்படுத்துகிறது. உண்மையாக சொல்லப்போனால், நான் இதை எனக்காக செய்யவில்லை. எனக்கு இந்தவிளையாட்டு மீது அளவு கடந்த காதல் உண்டு.என்னால் முடிந்தவரை நீண்ட காலத்திற்கு ஒரு பந்தய ஓட்டுநராக இருக்க நான் நிச்சயமாக விரும்புகிறேன்” என்றார்.