சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. ஆனால், நடப்பு அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட டி.என்.2026 என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
நடிகர் நட்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதித்தால், அது வாக்காளர்கள் மத்தியில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும். நியாயமான தேர்தல் நடத்துவதையும் பாதிக்கும். எனவே, தேர்தல் முடியும்வரை இந்த படத்தை திரையிடுவதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 6-ந்தேதி மனு கொடுத்தேன். பரிசீலிக்கவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிடவேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், இந்த திரைப்படம் வெளியாகி விட்டதால், இந்த வழக்கே செல்லத்தக்கதல்ல. எனவே, வழக்கை திரும்ப பெற அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.