சென்னை,
நடிகர் பார்த்திபன் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை கோர்ட்டு அனுமதியுடன் ஏற்கனவே சான்றிதழ் பெற்றுவிட்டார். பின்னர் மற்றவர்களுக்கும் சான்றிதழ் எளிதில் கிடைப்பதற்காக பார்த்திபன் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்கக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டு அது நிராகரிக்கப்பட்டதால் கோர்ட்டு அனுமதியுடன் ஏற்கனவே சான்றிதழ் பெற்றுவிட்டார். பின்னர் மற்றவர்களுக்கும் சான்றிதழ் எளிதில் கிடைப்பதற்காக பார்த்திபன் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் "சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் கோரி வழங்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு கடந்த 2025-ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கும், அரசுக்கும் சுமுக உறவு இல்லாததால், இந்த உத்தரவு கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அந்தநிலை இல்லாததால், சாதி, மதமற்றவர் என சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்கள் உடனடியாக சான்றிதழ் பெறும் வகையில், சட்டம், அல்லது அரசாணை, சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதி மதமற்றவர் என சான்று பெற குடிமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியதுள்ளது. அதனால், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கவேண்டும் என்று அருண்குமார் என்பவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட் டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பார்த்திபன் தொடர்ந்த வழக்கிற்கு ஏற்கனவே பதிலளிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு மூலம் பொதுமக்கள் பயனடைவார்கள் என்பதால், இடையீட்டு மனு தேவையில்லை. நடிகர் பார்த்திபனின் மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.