சினிமா செய்திகள்

நடிகர் ராஜேஷ்கன்னா விவகாரம்; நடிகை அனிதா மனு தள்ளுபடி

இந்த மனுவை விசாரிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இதனை 'ஆடம்பர வழக்கு' என குறிப்பிட்டு மனுவை ஏற்க மறுத்தனர்.

மும்பை,

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவின் மனைவியாக தன்னை அங்கீகரிக்கக் கோரி முன்னாள் நடிகை அனிதா அத்வானி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட ராஜேஷ் கன்னா, நடிகை டிம்பிள் கபாடியாவை கடந்த 1973-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என 2 மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையே, ராஜேஷ் கன்னாவுடன் பல ஆண்டுகளாகத் திருமண உறவைப் போன்ற குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்ததாக அனிதா அத்வானி கூறி வந்தார். மேலும், அவருடன் மும்பையில் உள்ள ஆசீர்வாத் இல்லத்தில் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் கன்னா உயிரிழந்த பிறகு, அவரது குடும்பத்தினரால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அனிதா அத்வானி குற்றம்சாட்டினார்.

அனிதா அத்வானியின் மனு தள்ளுபடி

இதையடுத்து, ராஜேஷ் கன்னாவுடனான தனது உறவை திருமண உறவாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவரது மனைவி என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும் கோரி கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அனிதா அத்வானியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ராஜேஷ் கன்னாவுக்கும் டிம்பிள் கபாடியாவுக்கும் இடையிலான சட்டப்பூர்வ திருமணம் விவாகரத்து மூலம் முடிவுக்கு வராததால், அனிதாவின் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது. இதனை எதிர்த்து அனிதா அத்வானி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

'ஆடம்பர வழக்கு' என உச்சநீதிமன்றம் கருத்து!

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த மனுவை விசாரிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இதனை 'ஆடம்பர வழக்கு' (Luxury Litigation) என குறிப்பிட்டு மனுவை ஏற்க மறுத்தனர்.

இதன் மூலம், ராஜேஷ் கன்னாவுடனான தனது உறவை திருமண உறவாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அனிதா அத்வானியின் நீண்டகால சட்டப் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

SCROLL FOR NEXT