சினிமா செய்திகள்

தர்ஷா குப்தா உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு... கைது செய்ய போலீசார் தீவிரம்

சேலத்தை சேர்ந்த வக்கீல் அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சேலம்,

சமூக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு தொடர்பாக நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆபாச பேச்சு

சேலத்தை சேர்ந்த வக்கீல் அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.

ஆபாசத்தை தூண்டும் வகையில் பேச்சு

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா, சூரிய பிரபா, ஹனி சென்னை, அபிநயா சித்ரா, பிரியங்கா ராஜ், சரண்யா, சந்தோஷ் உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர். அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

12 பேரை கைது செய்ய நடவடிக்கை

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.