தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம், நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கைகளை இணைத்து உருவாகியுள்ளது.
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் கடந்த 14ம் தேதி வெளியாகவில்லை. சூர்யாவின் படத்தை கொண்டாடி தீர்க்கலாம் என்று கருப்பு சட்டை அணிந்து காலை முதலே ஆர்வமாக தியேட்டரை நோக்கி படையெடுத்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.
அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு ‘கருப்பு’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. சென்னை ரோகினி தியேட்டரில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் இணைந்து நடிகை திரிஷா, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பார்த்து ரசித்தனர். கமல் ஹாசன் ‘கருப்பு’ படத்தை பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது எக்ஸ் பக்கத்தில், “திரையரங்கம் முழுமையாக சிதறுவதுடன் சூர்யா சாரின் கடவுள் அவதாரம் நெருப்பாக இருக்கிறது. படக்குழுவினர் மாஸ் ஆக்சன் குடும்ப பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துள்ளனர். தற்போது, அந்த ஒருவரை (சூர்யா) எதுவும் தடுக்க முடியாது” என கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ‘கருப்பு’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். படம் குறித்து அவர் எக்ஸ் தளத்தில் “கருப்பு திரைப்படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்ந்தேன். சூர்யா சார்,எனக்கு மிகவும் பிடித்த திரிஷா, சாய் அபயங்கர் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் இந்த கோடைக்காலத்தில் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கியிருப்பதை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆர்.ஜே. பாலாஜி நீங்கள் இவ்வாறு கொண்டாடுவதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரபு எஸ்.ஆர். வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.