சினிமா செய்திகள்

டொவினோ தாமஸின் 'பள்ளிச்சட்டம்பி' பட ரிலீஸ் தேதியில் மாற்றம்!

மலையாள புத்தாண்டு பண்டிகையான (விஷு) அன்று திரையரங்குகளில் 'பள்ளிச்சட்டம்பி' படம் வெளியாக உள்ளது.

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கடந்தாண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார்,லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையில், டொவினோ தாமஸ், மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், நடிகை கயாடு லோகர் நாயகியாக நடித்துள்ளார். மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் கெடமங்களம், பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

1950 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 10ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதனை முன்னிட்டு படத்தின் டிரெய்லரையும் வெளியிட்டது.

இந்த நிலையில், ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு மாற்றியுள்ளது. அதன்படி, நடிகர் டொவினோ தாமஸ் இதுகுறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலையாள புத்தாண்டு பண்டிகையான (விஷு) அன்று திரையரங்குகளில் 'பள்ளிச்சட்டம்பி' படம் வெளியாக உள்ளது. கேரள மறுமலர்ச்சி வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு அசாதாரண மனிதரான 'சட்டம்பி'யின் கதையைச் சொல்ல நாங்கள் வருகிறோம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதில் நாங்கள் சில தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, படத்தின் வெளியீடு ஏப்ரல் 15-ஆம் தேதியான 'விஷு' தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நேரத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுடன் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 'பள்ளிச்சட்டம்பி' படக்குழு என்று பதிவிட்டுள்ளார்.