சென்னை,
நடிகர் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ள இந்த படத்தில், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பணிகள் 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் படம் தொடர்ந்து தள்ளிப்போனது. கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளியீட்டுக்கு முந்தைய நாளில் படம் ரிலீஸ் தள்ளிப்போவதாக இயக்குநர் கவுதம் மேனன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, படத்தின் வெளியீட்டு தேதி குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
படம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் கவுதம் மேனன், “நிதிச் சிக்கல்கள் காரணமாக ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தாமதமானது. அந்த பிரச்னைகளை சமாளிக்க சில ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியும் என நம்புகிறேன். இப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காகவே, இந்த காலகட்டத்தில் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை” என்று தெரிவித்திருந்தார்.
இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்ய கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. உத்தரவில் “ விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிடலாம். இப்பட நிதி விவகாரங்களை கையாள தனியாக ‘கொண்டாடுவோம் என்டர்டெயின்ட்மென்ட்’ என்ற பெயரில் புதிய வங்கி கணக்கு திறக்கவும், அதன் வரவு செலவுகளை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிக்கவும், நீதிமன்ற உத்தரவின்றி இதில் உள்ள பணத்தை எடுக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
படத்தின் இயக்குநர் மற்றும் இணைத் தயாரிப்பாளரான கவுதம் மேனன், திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கடனாளிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக, அவர் ஏற்கனவே அடையாளம் கண்ட சில முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற வேண்டியிருக்கும். மேலும், வெளியீட்டுத் தேதியை இறுதி செய்வதற்கு முன்பு, அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். ஒருவேளை ஜூன் 15க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கால அவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
12 ஆண்டுகள் கழித்து வெளியான ‘மதகஜராஜா’ படம் மாபெரும் வெற்றியடைந்ததைப் போல, ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெற்றியடையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.