சென்னை,
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனை லைகா நிறுவனம் அடைத்தது. அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை, விஷால் தயாரிக்கும் படத்தை லைகா நிறுவனத்திடம் கொடுக்கவேண்டும். ஆனால், ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த படத்தை வெளியிட முயற்சித்ததால், அவருக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடன் தொகை ரூ.21 கோடியே 29 லட்சத்துக்கு 30 சதவீத வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு விஷால் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல்முறையீடு செய்தார். நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 21 கோடி ரூபாயில், ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய ஆறு வார கால அவகாசம் வழங்கக் கோரி விஷால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், பணத்தை திரட்ட அவகாசம் தேவைப்படுவதால், ரூ.10 கோடி பணத்தை டெபாசிட் செய்வதற்கு 6 வார கால அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அவகாசம் கேட்டு மனுத் தாக்கல் செய்து எட்டு வாரங்கள் கடந்து விட்டதால், அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி, நடிகர் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.