வாஷிங்டன்,
உலகப் புகழ் பெற்ற ‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரது திரைப்படங்கள் சுவாரஸ்சியமான, அதே சமயம் தலையை சுற்ற வைக்கும் திரைக்கதைக்கு பெயர் பெற்றவையாகும். குறிப்பாக ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. தனது படங்களில், ரசிகர்களுக்கு துல்லியமான காட்சி அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘ஐமேக்ஸ்’ கேமராவை நோலன் அதிகமாக பயன்படுத்துகிறார். மேலும், கிராபிக்ஸ் காட்சிகளை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்தவும் நோலன் விரும்புவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படமாக ‘தி ஒடிசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கவிஞர் ஹோமரின் கிரேக்க புராண காவியத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. எப்போதும் எதார்த்தமான கதைக்களத்தை தேர்வு செய்யும் கிறிஸ்டோபர் நோலன், முதல் முறையாக புராண கதையை படமாக எடுக்கிறார் என்பதால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதே சமயம், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ‘ஹெலன்’ கதாபாத்திரத்தில் நடிகை லூபிடா நியாங்கோ நடிக்க உள்ளதாக வெளியான தகவல் சில ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. புராண கதையில் வரும் ‘ஹெலன்’ என்ற பெண், ஒரு பேரழகியாக வர்ணிக்கப்படுகிறார்.
மெனலஸ் என்ற மன்னனின் மனைவியான ஹெலன், டிராய் இளவரசன் மீது காதல் கொண்டு அவருடன் சென்றதன் விளைவாகவே மாபெரும் டிரோஜன் போர் நிகழ்வதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய கதாபாத்திரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு நடிகையை நடிக்க வைப்பதா? என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர். அவ்வாறு கேள்வி எழுப்பியவர்களில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கும் ஒருவர்.
ஹாலிவுட்டில் சமீப காலமாகவே பல திரைப்படங்கள் ‘வோக்’(Woke) கலாசாரம் வழிந்து திணிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது கதைக்கு தேவைப்படாவிட்டாலும் சமூக நீதி, பன்முகத்தன்மை, பாலின சமத்துவம், தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட கருத்துகள் பல திரைப்படங்களில் இடம்பெறுவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படமும் இந்த விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது. இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் விமர்சித்த எலான் மஸ்க், ‘விருதுகளைப் பெறுவதற்காக நோலன் முயற்சிக்கிறார்’ என்றும் ‘கிரேக்க மக்களை நோலன் அவமதித்துவிட்டார்’ என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அதே சமயம், இந்த விமர்சனங்கள் குறித்து நோலன் கூறுகையில், ‘இலியட் என்ற காவியம் பெரும்பாலும் செவி வழியாகவே மக்களிடம் கடத்தப்பட்டு வந்துள்ளது. அதை குறிக்கும் விதமாகவே டிராவிஸ் ஸ்காட் உள்ளிட்ட கருப்பின நடிகர்களை தேர்வு செய்தேன்’ என்று கூறியுள்ளார். நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படம் வரும் ஜூலை 17-தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.