சினிமா செய்திகள்

“தி ஒடிசி” படத்தின் இந்திய ஐமேக்ஸ் முன்பதிவு தேதி அறிவிப்பு

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ படம் வருகிற ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது.

உலகப் புகழ் பெற்ற ‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரது திரைப்படங்கள் சுவாரஸ்சியமான, அதே சமயம் தலையை சுற்ற வைக்கும் திரைக்கதைக்கு பெயர் பெற்றவையாகும். குறிப்பாக ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. தனது படங்களில், ரசிகர்களுக்கு துல்லியமான காட்சி அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘ஐமேக்ஸ்’ கேமராவை நோலன் அதிகமாக பயன்படுத்துகிறார்.

இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்திற்கு ‘தி ஒடிசி’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. மேட் டாமன், ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்ட் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில், அன்னே ஹாத்வே, ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி உருவாகும் இப்படம் வருகிற ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது. ‘தி ஒடிசி’ திரைப்படம் ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்டதால் இதன் ஐமேக்ஸ் வெளியீட்டைக் காண பலரும் ஆர்வமாக உள்ளனர். சமீபத்தில் ‘தி ஒடிசி’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் இணையத்தில் கவனத்தை பெற்றது.

இப்படத்தை முழுமையாக ஐமேக்ஸ் பிலிம் ரோல் கேமராவில் 20 லட்சம் அடிகள் வரை எடுத்துள்ளாராம். இதனை அளந்தால் 600 கி.மீ. நீளத்திற்குச் செல்லக் கூடியது எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படத்திற்கான இந்திய ஐமேக்ஸ் முன்பதிவு வருகிற ஜூன் 8 ஆம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.