பெங்களூரு,
தர்ஷன், அவரது குடும்பத்தினருக்கு எதிராக பேச நடிகர் தன்வீருக்கு தடை விதித்தும், இதுபற்றி விளக்கம் அளிக்கவும் அவருக்கு நோட்டீஸ் வழங்கி சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவரது மனைவி விஜயலட்சுமி. தர்ஷனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தவர் நடிகர் தன்வீர். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில், தர்ஷன் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும், பிற செலவுக்காக விஜயலட்சுமியிடம் இருந்து தன்வீர் பணம் வாங்கி இருந்தார். அவர் செலவு தொகை சரியாக தெரிவிக்காததால், தன்வீருக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து தர்ஷன், விஜயலட்சுமி ஆகியோர் குறித்து தன்வீர் அவதூறாக பேசி இருந்தார். அவர் பேசிய ஆடியோக்களும் வெளியானது. இந்த விவகாரத்தில் தன்வீர் மீது ராஜராஜேஸ்வரிநகர், பசவேசுவராநகர், சாம்ராஜ்பேட்டை ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவாகி உள்ளது.
இந்த வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் தன்வீருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அவரிடம் விசாரித்து விட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நடிகர் தன்வீர், தன்னை பற்றியும், கணவர் தர்ஷன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக அவதூறாக பேசி வருவதாகவும், இதற்கு தடை விதிக்க கோரியும் பெங்களூரு 12-வது சிட்டிசிவில் கோர்ட்டில் விஜயலட்சுமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் குடும்பத்தினர் குறித்து நடிகர் தன்வீர் பேசுவதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் விஜயலட்சுமி தொடர்ந்த மனு மீது உரிய விளக்கம் அளிக்க தன்வீருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஒருபுறம் போலீஸ் நோட்டீஸ், மற்றொரு புறம் கோர்ட்டு உத்தரவாலும் தன்வீர் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.