'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20-ந்தேதி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு கோர்ட்டு அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.
இன்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய கல்வி மந்திரி பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகிய நிலையில் டெல்லி போராட்டக் களத்தில் இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே, “நாங்கள் அதை சாதித்துவிட்டோம். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆட்சியாளர்களை முழங்காலிட வைக்க முடியும் என்பதை சிஜேபி நிரூபித்துவிட்டார்கள் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “வாழ்த்துகள் எனது அன்பிற்குரிய கரப்பான் பூச்சிகளே. மதிப்பிற்குரிய சோனம் வாங்சுக் சார் அவர்களுக்கும், இளைஞர்களுடன் உறுதுணையாக நின்ற ஒவ்வொருவருக்கும் என் வாழ்த்துகள். அதிகாரத்தில் இருக்கும் ஓர் ஆட்சியை முழங்காலிட வைக்க முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.