நானி நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தனது 33-வது படமான ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி (இன்று) வெளியாகி உள்ளது. இதில் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ (Yeshanagula) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தி பாரடைஸ்’ படம் இன்று வெளியாகி உள்ளதை முன்னிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ‘யேஷானகுலா’ பாடலின் போது எடுத்த இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் அவரது பதிவில்," 'ஜடால்' உலகத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் இருவரும் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு, என் நண்பர்களான நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தச் சிறப்பான படைப்பிற்காக எனது 'தசரா' (Dasara) படக் குழுவினருடன் மீண்டும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
அனிருத், நீங்கள் எங்களை ஆச்சரியப்படுத்துவதை ஒருபோதும் நிறுத்துவதில்லை; 'யேஷநகுலா' பாடல் ஒரு தனித்துவமான உற்சாகத்தை அளிக்கிறது. உங்கள் அன்புக்கும், நீங்கள் உருவாக்கிய ரீல்ஸுக்கும் மற்றும் எனது 'லங்கவோனி' (langavoni) தோற்றத்தை அழகாக மீண்டும் உருவாக்கியதற்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.