சினிமா செய்திகள்

விஜய் மக்களின் இதயத்தில் இடம்பிடித்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் - நடிகை சங்கவி

முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டும்தான் செய்வார் என்று நடிகை சங்கவி கூறியுள்ளார்.

ரசிகன், விஷ்ணு உள்பட பல படங்களில் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் லக்கி ஜோடி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜோடியாக விஜய்யும் சங்கவியும் திகழ்ந்தனர். விஜய் தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த சங்கவி, அஜித்தின் அமராவதி படம் மூலம் தமிழுக்கு வந்தார். 80 மேற்பட்ட படங்களில் சங்கவி நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் உடன் அதிக படங்களில் சேர்ந்து கதாநாயகியாக நடித்துள்ளார். கமல், ரஜினி, சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.கடந்த 2016ஆம் ஆண்டு வெங்கடேஷ் என்பவரை சங்கவி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சங்கவி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

விஜய் குறித்து நடிகை சங்கவி “முதல்-அமைச்சர் விஜய் நல்லது மட்டும் தான் செய்வார். பலமுறை யோசித்து செய்வதால் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வார். அவர் நிச்சயமாக நல்ல திட்டங்களை எடுத்துக் கொண்டு வருவார். அதுதான் எங்களுடைய நம்பிக்கை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விஜய்யை பிடிக்கும். மக்களின் இதயத்தில் இடம்பிடித்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். கண்டிப்பாக அவர் நல்லது செய்வார்” என்று கூறினார்.