ஆந்திர மாநில துணை முதல்-அமைச்சரும், நடிகருமான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய், மறுமணம் குறித்து தனக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு முன்பு அளித்த பதில் தற்போது மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.தெலுங்கு நடிகரான பவன் கல்யாண், நடிகை ரேணு தேசாயை கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2012-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய ரேணு தேசாய், எதிர்காலத்தில் மறுமணம் செய்துகொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரேணு தேசாய், சமூக வலைதளத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதில், "நமது சமூகத்தில் ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், பெண்கள் மற்றொரு திருமண உறவைப் பற்றி நினைத்தாலே அது பாவமாக பார்க்கப்படுகிறது. ஒரு பெண் தனது வாழ்நாள் முழுவதும் தனியாகவும், கவலையுடனும் வாழ வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், பவன் கல்யாணுடன் வாழ்ந்த காலத்தில் அவரை நெருக்கமாக புரிந்துகொண்ட நபர் தான்தான் என்றும் ரேணு தேசாய் தெரிவித்துள்ளார். கணவராக மட்டுமின்றி நண்பராகவும், தன்னுடன் இணைந்து பணியாற்றியவராகவும் அவர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது ரேணு தேசாயின் பழைய கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. ஏற்கனவே இருமுறை விவாகரத்து பெற்ற பவன் கல்யாண் 3-வதாக திருமணம் செய்த அன்னா லெஸ்னவாவை பிரிவிவதாக அறிவித்துள்ளார். 2013-ஆம் ஆண்டு மூன்றாவது திருமணம் செய்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக இருவரும் கூட்டறிக்கை மூலம் பிரிவதாக அறிவித்தனர்.