கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

காலத்தின் தேவை கருதி இந்தியையும் கற்கலாம் - வைரமுத்து பேச்சு

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரியக்கூடாது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

பணக்காரர்கள் படிப்பதற்கு செல்ல பல்வேறு இடங்கள் இருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மாணவர்கள், மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளை நாடுகிறார்கள். ஆனால், இந்த ஆண்டு வந்துள்ள செய்திகள் மகிழ்ச்சியாக இல்லை. புள்ளி விவரங்களின்படி, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து இருக்கிறது. அது சரியக்கூடாது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்.

அப்துல்கலாம், தமிழ் வழியில் கல்வி பயின்றவர். தமிழில் என்ன இருக்கிறது என கேட்கிறார்கள். தமிழில் ஒரு ஜனாதிபதியே இருக்கிறார். தமிழை குறைத்து சொல்லக்கூடிய ஒரு சமூகம் இருந்தால், அந்த சமூகம் அழிந்தே போகட்டும்.

தாய் மொழி கண்போன்றது. பிறமொழியானது, கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. அதனால், தாய் மொழியை கற்ற பிறகு, மற்ற மொழிகளை கற்க வேண்டும். இந்தியையும் கற்க வேண்டும் என்றால் கற்றுக்கொள்ளுங்கள். காலத்தின் தேவை கருதி இந்தி மொழியையும் கற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.