சினிமா செய்திகள்

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா?: 11-ந் தேதி முக்கிய அறிவிப்பு - ராகவா லாரன்ஸ் பரபரப்பு பதிவு

தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அறிவிப்பு வரும் 11-ம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சென்னை,

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல் போட்டி குறித்த வதந்தி

திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்"

"திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பலரும் என்னை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கிறார்கள். இந்த வதந்திகளும் ஊகங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டிவிட்டதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பென்ஸ்’ படப்பிடிப்பில் பிஸி

தற்போது தாம் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டு இருப்பதாகவும், அந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 11-ம் தேதி முக்கிய அறிவிப்பு

மேலும், தனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 11-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"எனது தாயாரின் ஆசியுடன், எனது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அரசியல் தொடர்பானதா அல்லது திரைப்படம் மற்றும் சமூக சேவை சார்ந்ததா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. எனினும், அதற்கான தெளிவான பதில் ஜூன் 11-ம் தேதி வெளியாகும் அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால், 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர முடியாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும்.

இதற்கிடையில், த.வெ.க. தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அல்லது நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.