சினிமா செய்திகள்

சர்ச்சைக்குரிய பாடல் விவகாரம்: தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட சஞ்சய் தத்

நடிகர் சஞ்சய் தத், டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நேற்று ஆஜரானார்.

புதுடெல்லி,

கன்னடத்தில் எடுக்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான “கேடி: தி டெவில்” படத்தில் நடிகை நோரா பதேஹியின் "சர்கே சர்கே சுனார் தேரி சர்கே" பாடல் இடம்பெற்று உள்ளது."வைரல்" ஆகிவிட்ட இந்த பாடலில் சில வரிகளும், நடன அசைவுகளும் ஆபாசத்தை வெளிப்படுத்துவதாக பெண்கள் புகார் கூறினர். இந்த பாடல் காட்சியில் நடிகர் சஞ்சய் தத்தும் நடித்து இருந்தார். பாடல் சர்ச்சை ஆனதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது. இதன்பேரில் சஞ்சய் தத்துக்கும், நோரா பதேஹிக்கும் விசாரணைக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோரா பதேஹியை கடந்த 6-ந்தேதியும், சஞ்சய் தத்தை 8-ந் தேதியும் மகளிர் ஆணையத்தினர் அழைத்திருந்தனர். ஆனால் அவர்கள் தங்களது வக்கீல்களை அனுப்பி வைத்தனர். இதனை மகளிர் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரையும் நேரில் ஆஜராக வலியுறுத்தியது. இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத், டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நேற்று ஆஜரானார். மகளிர் ஆணைய தலைவி விஜயா ரகோத்கர் தலைமையிலான ஆணையத்தினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சஞ்சய் தத், "அந்த பாடல் வரிகள் வேறு மொழியில் இருந்ததால் எனக்கு அந்த வரிகளின் அர்த்தம் தெரியாது" என கூறினார். இருப்பினும் அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறினார்.

இது மட்டுமின்றி, இதற்கு பிராயசித்தமாக பழங்குடியின குழந்தைகள் 50 பேருக்கு கல்விநிதி அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை அவருடைய வக்கீல், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சஞ்சய் தத் வருகையையொட்டி, மகளிர் ஆணையம் அமைந்துள்ள பகுதி நேற்று பரபரப்பாக இருந்தது. சர்ச்சைக்குரிய பாடல் இடம்பெற்ற படம், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.