சினிமா செய்திகள்

'ஆபீசர் ஆன் டியூட்டி' படத்தில் காட்டப்பட்ட செல்போன் எண்ணால் சர்ச்சை

ஒருவரின் அனுமதியின்றி அவருடைய செல்போன் எண் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

கொச்சி,

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆபீசர் ஆன் டியூட்டி'. இந்தப் படத்தில் இடம்பெற்ற செல்போன் எண் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்

எர்ணாகுளத்தைச் சேர்ந்த அக்ஷய் பிரகாஷ் என்பவர், தனது அனுமதியின்றி அவருடைய செல்போன் எண் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார். திரைப்படம் வெளியான பிறகு, அந்த எண்ணுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், மிரட்டல் குறுஞ்செய்திகளும் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனக்கு மன உளைச்சலும் பாதிப்பும் ஏற்பட்டதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய எர்ணாகுளம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு எர்ணாகுளம் மத்திய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், படத்தின் தயாரிப்பாளர் மார்ட்டின் பிரகாட், இணை தயாரிப்பாளர்கள் சிபி சாவரா, ரெஞ்சித் நாயர் உள்ளிட்டோரின் பெயர்களும் புகாரில் இடம்பெற்றுள்ளன. நெட்பிளிக்ஸ், ஜீ என்டர்டெயின்மென்ட், மெட்டா, வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உண்மையான நபரின் செல்போன் எண்ணைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கற்பனையான எண்ணைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என புகார்தாரர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT