சினிமா செய்திகள்

நிகிலா விமல் நடித்த “அனலி” வெப் தொடருக்கு தடை விதித்த நீதிமன்றம்

25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவையே உலுக்கிய கொலை வழக்கை மையப்படுத்தி ‘அனலி’ வெப் தொடர் உருவாகியுள்ளது.

‘அனலி’ வெப் தொடர் வெளியீட்டுக்கு எதிரான தடையை நீட்டித்து கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமாக கடந்த வருடங்களில் நடைபெற்ற பிரபல கொலை வழக்குகளை மையப்படுத்தி பல வெப் தொடர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. மலையாளத்தில் உருவான ‘அனலி’ என்கிற வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாகவிருந்த நிலையில், நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் இந்த வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இதில் நிகிலா விமல், லியோ லிசாய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவையே உலுக்கிய கொலை வழக்கை மையப்படுத்தி இந்த வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜோலி ஜோசப் என்கிற பெண், எர்ணாகுளம் கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இந்த வெப்தொடரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறும்போது, “தற்போது வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வெப் சீரிஸில் உள்ள ஒரு முக்கியப் பெண் கதாபாத்திரம் தன்னை ஒத்திருப்பதாகவும், தன்னை குற்றவாளியாகச் சித்தரிக்கும் வகையில் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், இந்த வெப் தொடரை வெளியிடும் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் இதற்கு தடை விதிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஜோலி ஜோசப்பின் மனுவைப் பரிசீலனை செய்த நீதிமன்றம், ஜியோ ஹாட்ஸ்டார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், ஜோலி ஜோசப்பின் மனுவை அங்கீகரித்து இந்த வெப்தொடர் வெளியீட்டுக்கு எதிரான தடையை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கு முடியும் வரை இந்த உத்தரவு தொடரும் எனத் தெரிவித்தது.

சயனைடு விஷம் கொடுத்து கொலை

கேரளாவில் 2002 முதல் 2016 வரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் 14 ஆண்டுகளில் சயனைடு விஷம் கொடுத்து அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அக்குடும்பத்தின் மருமகள் ஜோலி ஜோசப் முதன்மை குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கேரள நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை வைத்து ஏற்கனவே நெட் பிளிக்ஸில ‘கரி மற்றும் சைனைட்; தி ஜோலி ஜோசப் கேஸ்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது.

SCROLL FOR NEXT