சென்னை,
சின்னத்திரையில் 'சித்தி' தொடரின் மூலம் கவனம் பெற்ற டேனியல் பாலாஜி, இயக்குநர் சுந்தர் கே. விஜயன் இயக்கிய 'அலைகள்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அப்படத்தில்தான் அவருக்கு 'டேனியல் பாலாஜி' என்ற பெயர் சூட்டப்பட்டது.
அதன் பின்னர் 'ஏப்ரல் மாதத்தில்', 'காதல் கொண்டேன்', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'பொல்லாதவன்', 'பைரவா', 'பிகில்', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்தார்.
குறிப்பாக, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'வடசென்னை' திரைப்படத்தில் டேனியல் பாலாஜி நடித்த 'தம்பி' கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த கதாபாத்திரம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான ஒன்றாக அமைந்தது.
ஆனால், 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், 'வடசென்னை' கதைக்களத்தைத் தொடரும் வகையில் உருவாகி வரும் 'அரசன்' திரைப்படத்தில், 'வடசென்னை'யின் பல முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.
டேனியல் பாலாஜியின் மறைவைக் கருத்தில் கொண்டு, அவரது 'தம்பி' கதாபாத்திரத்திற்கு புதிய நடிகரை தேர்வு செய்ய வேண்டாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக, 'அரசன்' படத்தின் கதையில் 'தம்பி' கதாபாத்திரம் உயிரிழந்ததாகவே குறிப்பிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதுகுறித்து படக்குழு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.