கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தர்ஷன், ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி தற்போது பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 11-ந் தேதி கைது செய்யப்பட்ட தர்ஷன், நேற்றுடன் சிறைவாசம் தொடங்கி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர், தர்ஷனின் நெருங்கிய தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் ஆபாச புகைப்படங்கள் மற்றும் அவதூறு தகவல்களை அனுப்பி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தர்ஷனின் ஆதரவாளர்கள், ரேணுகாசாமியை சித்ரதுர்காவில் இருந்து பெங்களூருவுக்கு அழைத்து வந்து தாக்கியதாகவும், அந்த தாக்குதலிலேயே அவர் உயிரிழந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காமாட்சி பாளையா காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், கடந்த 2024-ம் ஆண்டு மைசூருவில் இருந்த நடிகர் தர்ஷனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தர்ஷன் மட்டுமின்றி அவரது தோழி பவித்ரா கவுடா, தர்ஷனின் ஆதரவாளர்களான வினய், ராகவேந்திரா, தனராஜ், நந்தீஸ் மற்றும் பவன் உள்ளிட்ட 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
வழக்கில் கைது செய்யப்பட்ட வினய், ராகவேந்திரா, தனராஜ், நந்தீஸ் மற்றும் பவன் ஆகியோர் பின்னர் நீதிமன்றத்தின் மூலம் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதேநேரத்தில், நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடாவுக்கு வழங்கப்பட்ட பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இதன் காரணமாக தர்ஷன் மற்றும் பவித்ரா கவுடா இருவரும் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தர்ஷன் இன்னும் ஓராண்டு காலம் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை உள்ளது. ரேணுகாசாமி கொலை வழக்கின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு மீதான பொதுமக்களின் கவனமும் குறையாமல் உள்ளது.