சென்னை,
நடிகர் சசிகுமார் நடிப்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான 'நந்தன்' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் இரா. சரவணன் இயக்கிய இந்தப் படத்தில் சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், ஜி.எம். குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் சசிகுமார் இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு வந்த பிறகும், உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதைக்காக போராடும் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
சமூக நீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தும் கதைக்களத்துடன் வெளியான 'நந்தன்' திரைப்படம், திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றது. சமூகத்தில் விவாதத்தை ஏற்படுத்திய படமாகவும் இது கவனம் பெற்றது.
இந்த நிலையில், சமூக மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படமாக 'நந்தன்' படத்தை தேர்வு செய்த டெல்லி தமிழ்ச் சங்கம், நடிகர் சசிகுமார் மற்றும் இயக்குநர் இரா. சரவணன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்துள்ளது.
மேலும், 'நந்தன்' திரைப்படத்தை டெல்லியில் மீண்டும் சிறப்பு திரையிடல் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக அக்கறையுடன் உருவான இந்தப் படத்திற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.