சினிமா செய்திகள்

“ஜெயிலர் 2” படத்தால் “டெலிவரி பாய்” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா உள்ளிட்டோர் ‘டெலிவரி பாய்’ படத்தில் நடித்துள்ளனர்.

லியோ சிவக்குமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி, ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார்.

இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தை, அசாசி கிரியேஷன்ஸ் சார்பில் அமுதா லியோனி தயாரித்துள்ளார்.

டிரெய்லரை வெளியிட்ட சிம்பு

‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரெய்லரை சிம்பு வெளியிட்டார். இப்படத்தின் டிரெய்லர், குடும்ப உணர்வுகள், காதல், ஆக்சன், காமெடி என பல அம்சங்களைக் கலந்து வழங்கும் ஒரு கமர்ஷியல் படத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அம்மா - மகன் பாசம்

அழகான அம்மா - மகன் பாசத்துடன் தொடங்கும் டிரெய்லர், அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்கிறது. சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் சிக்கிக்கொள்ளும் கதாநாயகனின் வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படுகிறது, அதன் மூலம் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை டிரெய்லர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியுடன் குற்றச் செயல்கள் சார்ந்த சம்பவங்களும் இணைந்திருப்பது கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

வீடியோ பாடல் வெளியீடு

லியோ சிவக்குமார், பிரிகிடா நடித்த ‘டெலிவரி பாய்’ படத்தின் ‘செங்காத்தியே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. மோகன் ராஜா எழுதியுள்ள இப்பாடலை விஷ்ணு ராம் பாடியுள்ளார்.

படத்தின் புதிய ரிலீஸ் அறிவிப்பு

‘டெலிவரி பாய்’ படம் அக்டோபர் 23 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முதலில் அறிவித்திருந்தது. ரஜினியின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ‘டெலிவரி பாய்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. ‘டெலிவரி பாய்’ படம் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT