சினிமா செய்திகள்

இசையமைப்பாளர் தேவா சொக்கத் தங்கம் - ரஜினிகாந்த் இரங்கல்

திரைப் பிரபலங்கள் பலர் தேவாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேவா அருமையான சொக்கத் தங்கம்.. அவரது திடீர் மறைவு வேதனை அளிப்பதாக வீடியோ மூலம் கண்ணீர் மல்க ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இசையமைப்பாளரும், பாடகருமான தேனிசை தென்றல் தேவா இன்று காலமானார். அவருக்கு வயது 75. இன்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேவா அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான மாநில அரசு விருது உள்ளிட்ட விருதுகளை தேவா பெற்றுள்ளார்.

அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை நுங்கம்பக்கம் இல்லத்தில் தேவாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரைப் பிரபலங்கள் பலர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தேவாவின் இல்லத்திற்கு கருப்பு உடையில் வந்த ரஜினிகாந்த், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, மனமுடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தின் புகழ்பெற்ற ‘சூப்பர் ஸ்டார்’ டைட்டில் கார்டு இசையை உருவாக்கியவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ மூலம் ரஜினிகாந்த் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். தேவா அவர்களுடன் தனக்கிருந்த நீண்ட கால நட்பு குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவர் தமிழ் இசை உலகில் பதித்த முத்திரையை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். இசைஞானி இளையராஜா அவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்திலும், தனக்கென ஒரு தனித்துவமான பாதையை அமைத்து வெற்றி கண்டவர் தேவா என்று அவர் புகழாரம் சூட்டினார்.

திரையுலகில் மனிதநேயத்திற்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் தேவா என்பதை நினைவுகூர்ந்த ரஜினிகாந்த், ‘படையப்பா’ படத்திற்கு ஏ.ஆர். ரகுமானை இசையமைப்பாளராக ஒப்பந்த செய்வது குறித்து தயக்கத்துடன் இருந்ததாகவும், அப்போது எந்தவித சங்கடமும் கொள்ளாமல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றச் சொல்லி தாராள மனதுடன் வாழ்த்தியவர் தேவா என்று அவர் குறிப்பிட்டார்.

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தெருத்தெருவாக கச்சேரி செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிய உழைப்பாளி தேவா என்று வர்ணித்த ரஜினிகாந்த், அவரிடம் எந்தவிதமான கள்ளம், கபடம், பொய் மற்றும் வஞ்சகம் கிடையாது என்றார். மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்த காரணத்தினாலேயே, தேவா மகிழ்ச்சியாக இருக்கும்போதே ஆண்டவன் அவரை அழைத்துக்கொண்டான் என்று ரஜினிகாந்த் உருக்கமாகத் தெரிவித்தார். தேவாவின் திடீர் மறைவு தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என்றும், அவரது நினைவுகள் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்றும் கூறி ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நாளை இறுதிச்சடங்கு

அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் மாங்காடு பகுதியில் நாளை மதியம் 1 மணி அளவில் தேவாவின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளதாக தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT