சென்னை,
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை காண, சென்னை ரோஹிணி திரையரங்கிற்கு லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் வருகை தந்தனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்ணா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ உருவாகியுள்ளது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் இப்படம், இன்று (அக்டோபர் 15) உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கர்நாடகா, ஐதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
தமிழகத்தில் காலை 9 மணி முதல் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள ரோஹிணி திரையரங்கிற்கு ரஜினிகாந்தின் குடும்பத்தினர் வருகை தந்தனர். லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களுடன் இணைந்து படத்தைப் பார்த்து வருகின்றனர். மேலும், நடிகர் தனுஷும் அதே திரையரங்கிற்கு வருகை தந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்தார். இதனால் ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது.