நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன்னுடைய 55-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
இதில் வில்லனாக நடிகர் மம்முட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கின்றனர். மம்முட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் உளவாளியாக நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தை இந்தாண்டு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘டி55’ படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் ஜூன் 18 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தனுஷின் 55வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.