நடிகர் துருவ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
சியான் விக்ரம் தமிழில் முன்னணி கதாநாயகனாக ஜொலித்து வருகின்றார். சியான் விக்ரமின் மகனான துருவ் முதலில் பாலாவின் இயக்கத்தில் அறிமுகமாவதாக இருந்தார். அர்ஜுன் ரெட்டி படத்தை விக்ரமுக்காகவும், துருவ்வுக்காகவும் ரீமேக் செய்ய ஒத்துக்கொண்டு தனது ஸ்டைலில் படமாக்கியிருந்தார் பாலா. ஆனால் அந்தபடம் விக்ரமுக்கு பிடிக்காததால் வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்து 2019 ல் வெளியிட்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமுடன் சேர்ந்து ‘மகான்வ் படத்தில் நடித்தார். ஆறு வருடங்களில் துருவ் இரண்டே படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நடித்திருந்தார். இது அவரது மூன்றாவது படமாகும். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள பைசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. பைசன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்ததால் துருவ்வின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது.
தற்போது, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் 4-வது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் துருவ் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். அவரே சபி உடன் இணைந்து திரைக்கதையையும் எழுதியுள்ளார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதை படக்குழுவினர் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
முதல் முறையாக துருவ் விக்ரமும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் இணைவதால் இந்தப் படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், கதைக்களம், இசையமைப்பாளர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ருக்மணி வசந்த், ஸ்ரீலீலா நாயகிகளாக நடிக்க உள்ளதாகவும், சாய் அபயங்கர் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.