தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குறித்து கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இயக்குநர் அமீர் சமூகம் மற்றும் அரசியல் குறித்து அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். விஜய் குறித்து பொதுவாகக் கருத்து தெரிவிக்கும் அமீர் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யார் கட்சி ஆரம்பிக்கலாம். அந்த வகையில் விஜய் கட்சியை ஆரம்பித்ததை வரவேற்கிறேன். அதன் பின்னர் அவருடைய நடவடிக்கைகளைத் தான் நான் விமர்சிக்கிறேன். விஜய் சரியாகச் செயல்பட்டால் ஆதரிப்பேன் எனத் தெரிவித்து வந்தார்.
நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்க நேரத்தில் அவரை சந்தித்ததாகவும் அப்போது சீமான் போன்ற மூன்றாம் சக்திகள் வளர்ந்து வரும் போது நீங்கள் (ரஜினி) கட்சி ஆரம்பித்தால் அது சீமான் தரப்பிற்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருத்து தெரிவித்ததாகவும், அது குறித்துப் பரிசீலிப்பதாகவும் நடிகர் ரஜினி சொன்னதாக தெரிவித்திருந்தார்
சமீபத்தில் இயக்குநர் அமீர் தெரிவித்ததாகச் சமீபத்தில் சில ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில், “அன்று ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்ததும் அவரை எதிர்த்தேன். பின்பு அவர் தன்னை திருத்திக் கொண்டு அரசியலில் இருந்து விலகி மீண்டும் நடிக்கச் சென்றார். இன்றும் அதே போல விஜய்யும் அரசியல் பற்றி எதுவும் தெரியாமல் கட்சி ஆரம்பித்து இருக்கிறார். விஜய்யும் கட்சியைக் கலைத்து விட்டுச் சென்றால் அவருக்கு நல்லது” என இயக்குநர் அமீர் கூறியதாக வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த செய்தியை இயக்குநர் அமீர் குறிப்பிட்டு, “அதுபோன்று நான் சொல்லவில்லை. அது பொய்யான செய்தி” எனத் தனது விளக்கத்தை அமீர் கூறி உள்ளார்.