பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அனைவரிடத்திலும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து மாறன்,தங்கலான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் சர்தார் 2, பாக்கெட் நாவல் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ் தவிர்த்து மலையாளம்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் மாளவிகா நடித்திருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தனியார் விழாவில் நடிகை மாளவிகா மோகனன் பங்கேற்றார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர், “நீங்கள் விஜய்யுடன் த்ரிஷா போல பயணிப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு உடனடியாக பதிலளித்த மாளவிகா மோகனன், “இது தேவையற்ற கேள்வி” என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து, தனது எக்ஸ் தளத்தில் மாளவிகா மோகனன் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். தமிழக ஊடகத்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அங்கு இருந்த சிலர் தேவையற்ற மற்றும் பரபரப்பை உருவாக்கும் நோக்கத்துடன் மிகவும் நாகரிகமற்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பினர். நடிகர் விஜய் எனக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக அறிமுகம். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. மேலும், அவரை நண்பராகக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது திரைப்பயணத்தை நெருக்கமாக கவனித்து வருவது எனக்கு வியப்பூட்டும் அனுபவமாக உள்ளது. எதிர்காலத்தில் ஊடகங்களுடனான உரையாடல்கள் அனைத்தும் பரஸ்பர மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடைபெற வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.