திருமணமாகி சில வாரங்களே ஆன நிலையில், மலையாள இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல் கொச்சி ஹோட்டல் அறையில் இறந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவரான பெல்ராஜ் கலாரிக்கல் (27), கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும் காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறைந்த இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல், மலையாளத்தில் வெளியான 'நிழல்', 'மதுரம்' மற்றும் 'தாகினி' உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களுக்குத் துணை இயக்குநராகப் பணியாற்றி சினிமா துறையில் தனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டவர்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்காக ‘கப்பி ஸ்குவாட்’ என்ற புதிய வெப்தொடரை இயக்கி இயக்குநராகவும் தனித்துவமாக அறிமுகமானார். நான்கு இளைஞர்களின் தொழில் முனைவோர் கனவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது. தன் படைப்பு மக்களின் மத்தியில் பாராட்டைப் பெற்று வரும் காலகட்டத்திலேயே அவர் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த மலையாளத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, பெல்ராஜ் கலாரிக்கல் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தன் காதலியை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆசியுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணமாகி சில வாரங்களே ஆன நிலையில், இளம் வயதில் அவர் உயிரிழந்திருப்பது அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் இயக்குநர் பெல்ராஜ் கலாரிக்கல் இறப்பு குறித்து பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளது.