சென்னை,
இயக்குநர் பாரதிராஜா (84 வயது) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவரது மகன் மனோஜ் மறைந்த நிலையில், அத்துயரிலிருந்து மீளாத பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார்.
1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய பின்னணியில் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரையுலகில் தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர். அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில் பாரதிராஜாவின் உடல் நாளை அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
பாரதிராஜாவின் புகழ் ஓங்கும். கலைத்துறை மட்டுமல்ல, பொதுமக்களும் பாரதிராஜாவுக்காக இரங்கல் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் ஒவ்வொரு தனிமனித வாழ்வையும் தன் கலை படைப்பால் பாதித்த பெருங்கலைஞன் பாரதிராஜா. அவர் புகழ் நிலைக்க! அவர் பெயர் வாழ்க! மரணம் என்பது அவரது பௌதிக உடலுக்கு மட்டும்தான். அவரது கலைக்கல்ல. அவரது கலை, காலம் கடந்தும் அவரது புகழை பாடிக் கொண்டிருக்கும். பாரதிராஜாவின் பெயரும், அவர் கலை படைப்புகளும் வாழ்க!
தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் பிரிவுக்கு பக்கத்தில் இருக்கும் காட்ரோட்டில் பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் நாளை பிற்பகல் 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட இருக்கிறது. சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று இரவு 9 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும். பிறகு சென்னையை விட்டு பிறந்த மண்ணுக்கு பாரதிராஜா புறப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.