சினிமா செய்திகள்

73 வயதில் காலமானார் கே. பாக்யராஜ்... ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய செய்தி!

அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை,

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1953 ஜனவரி 7-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தனது தனித்துவமான திரைக்கதை மற்றும் வசனங்களால் விரைவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார்.

'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு', 'இன்று போய் நாளை வா', 'மௌன கீதங்கள்', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி, நடித்தும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான கதைகளை மையமாகக் கொண்டு திரைப்படங்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள பாக்யராஜ், 'திரைக்கதை மன்னன்' என்ற பட்டத்தையும் பெற்றார். மேலும், அவர் இயக்கிய முதல் 10 திரைப்படங்களும் வெள்ளிவிழா வெற்றி பெற்றது அவரது சாதனையாகும். இயக்கம், நடிப்பு மட்டுமின்றி 'இது நம்ம ஆளு' உள்ளிட்ட ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பாக்யராஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றன. தமிழ் சினிமாவின் பொற்கால இயக்குநர்களில் ஒருவராக விளங்கிய அவரது படைப்புகள் என்றும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.