தனது முதல் படமான ‘பீட்சா’ வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான நன்றியறிக்கை தற்போது வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான ‘பீட்சா’ வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், “14 ஆண்டுகள்.... 10 திரைப்படங்கள்..... இந்த நீண்ட நெடிய சாதனையை என் வாழ்வில் சாத்தியமாக்கிய எனது தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்-நடிகைகள், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் எனது உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
தனது தனித்துவமான கதைக்களங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் சினிமா ரசிகர்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “எனது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தங்களது அளப்பரிய பேராதரவையும் அன்பையும் காட்டிய அன்பான சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்! நான் எப்போதும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
2012-ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பீட்சா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், தொடர்ந்து ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ உட்பட பல மறக்க முடியாத 10 மாபெரும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவருக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை இணையத்தில் குவித்து வருகின்றனர்.